‘ஆற்றைக் காணவில்லை’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள்: தருமபுரியில் பரபரப்பு


தருமபுரி: ‘ஆற்றைக் காணவில்லை’ என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி நகரையொட்டி சனத்குமார் நதி அமைந்துள்ளது. இந்த நதி சில இடங்களில் ஆக்கிரமிப்பில் சிக்கியும், சில இடங்களில் கழிவுநீர் சேரும் இடமாகவும், பல இடங்களில் புதர் மண்டியும் காணப்படுகிறது. தருமபுரி அருகே உள்ள வத்தல்மலை உள்ளிட்ட பகுதியிகளில் இருந்து மழைக் காலத்தில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வழித்தடத்தில் உள்ள சில ஏரிகளை நிரப்பிக் கொண்டு சனத்குமார் ஆற்றின் வழியாகச் சென்று இருமத்தூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் இணையும். ஆனால், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் சனத்குமார் நதி பல ஆண்டுகளாகவே அதன் உண்மை வடிவத்தை இழந்து காணப்படுகிறது.

இதற்கிடையில், அண்மையில் தருமபுரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சதீஸ் உத்தரவின் பேரில் அன்னசாகரம் சாலை அருகே சனத்குமார் நதியில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ‘சனத்குமார் ஆற்றைக் காணவில்லை... கண்டுபிடித்து தர வேண்டும்’ என்ற வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகள் தருமபுரி நகரம் முழுவதும் நேற்று ஒட்டப்பட்டிருந்தன. சுவரொட்டியின் கீழ் பகுதியில், தருமபுரி மாவட்ட அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள்’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்த சுவரொட்டிகளால் தருமபுரி நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவரொட்டி குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, ‘சுவரொட்டிகளை அச்சிட்டுத் தந்த அச்சகத்தின் பெயர், தொடர்பு எண் போன்ற விவரங்கள் எதுவும் அந்த சுவரொட்டிகளில் இல்லை. இருப்பினும், இரவில் சுவரொட்டிகளை ஒட்டிய பணியாளர்கள் யாரென சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டறிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுவரொட்டியை ஒட்டச் செய்தவர்கள் விரைவில் யாரென தெரியவரும்’ என்றனர்.

x