வீடு புகுந்து தாக்கிய விசிக பெண் மாவட்ட செயலாளர்; கள்ளக்குறிச்சி வைரல் வீடியோவால் பரபரப்பு


பழனியம்மாள்

கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் உள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், தான் வசிக்கும் வீட்டுக்கு எதிரில் உள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்துள்ளார்.

கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன், இதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் என்பவர் வந்து, தன்னுடைய பட்டா இடத்தில் மரக்கன்றுகளை நட்டதாக தெரிவித்து, அதனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனியம்மாள், தான் அரசு புறம்போக்கு இடத்தில் தான் மரக்கன்றுகளை வளர்ப்பதாக கூறி, சரவணன் வீட்டை கல் வீசி தாக்கி சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஒன்றரை மாதத்துக்குப் பிறகு இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலை தளத்தில் தற்போது வைரலாகி, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“இரு தரப்பு புகாரின் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளோம். நில அளவையரை வைத்து அளவீடு செய்து, சமரச முயற்சி மேற்கொண்டிருக்கும் சூழலில் வீடியோ வெளியானதால் பிரச்சனைக்கு உரியாகிவிட்டது” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். ‘வீடியோவில் கல் வீசி தாக்கும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதா ?’ என்று கேட்டதற்கு, காவல்துறையினர் பதிலளிக்க மறுத்து விட்டனர்.

x