விழுப்புரம்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசியல் நையாண்டி கலைஞர் குணால் கம்ரா, கடந்த மாதம் மும்பையில் உள்ள ஹேபிடட் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வரும், சிவ சேனாவின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சனம் செய்திருந்தார்.
குணாலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவரது பேச்சுக்கு சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்வினை ஆற்றிருந்தனர். மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "தனது கீழ்த்தரமான நகைச்சுவைக்காக குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித் திருந்தார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து ஏக் நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கே கருத்துச் சுதந்திரம் உள்ளது. நையாண்டியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. அந்த நகைச்சுவை கலைஞர் ஒருவருக்கு எதிராக பேசுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டது போல தெரிகிறது. அவர் என்னைப் பற்றி மட்டும் இல்லை, நமது பிரதமர், உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் சில தொழிலதிபர்களைப் பற்றியும் கேலி செய்துள்ளார். இதை கருத்துச் சுதந்திரம் எனக் கூற முடியாது. யாருக்காகவோ வேலை செய்வது போல இருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனது துரோகி என்ற பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள குணால் கம்ரா, “கருத்துச் சுதந்திரம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களை புகழ்வது மட்டுமே என்று சுருங்கி விடக்கூடாது. தனது பேச்சுக்காக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. எந்த ஒரு சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கும் போலீஸாருடன் ஒத்துழைக்கத் தயார். ஒரு நகைச்சுவை பேச்சுக்காக கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்துவது என்பது, உங்களுக்கு பரிமாறப்பட்ட பட்டர் சிக்கன் பிடிக்கவில்லை என்பதற்காக தக்காளி ஏற்றிச் சென்ற லாரியை கவிழ்ப்பது போல அர்த்தமில்லாதது” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவசேனா கட்சியின் எம்எல்ஏ முர்ஜி பட்டேல் அளித்த புகாரின்பேரில் குணால் கம்ரா மீது வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே விழுப்பும் மாவட்டத்தில் தங்கியிருக்கும் குணால் கம்ரா முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் குணால் கம்ரா நேற்று காலை 10.30 மணிக்கு வானூர் நடுவர் மற்றும் உரிமையில் நீதிபதி பிரீத்தி முன்னிலையில் ஆஜரானார். அப்போது விசாரித்த நீதிபதி பிரீத்தி 2 பேர் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் புதுச்சேரி மாநிலம் ஆலங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோபி (40), சரவணன் (35) ஆகியோர் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டதின் பேரில் அதனை ஏற்றுக்கொண்டார். அவரை வரும் 7-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.