புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் விரைவில் மாற்றம்? - அமித் ஷா ஆலோசனை


புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக மாநிலத் தலைவர் செல்வ கணபதி எம்.பி சந்தித்து பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து தொடர் இழுபறியில் இருந்த புதுச்சேரி மாநிலத் தலைவர் நியமனம் விரைவில் நடக்கவுள்ளதாக இந்த சந்திப்பைக் குறிப்பிட்டு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், புதுச்சேரியில் பாஜக முன்கூட்டியே களம் இறங்கியது. காங்கிரஸில் இருந்து முக்கிய அமைச்சர், எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் பலரும் பாஜகவில் இணைந்தனர். அப்போதைய மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் பாஜக இத்தேர்தலை சந்தித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாஜக தரப்பில் 6 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.

பின்னர் 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமித்தது. இதில் பலரும் வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் சேர்ந்து வெற்றி பெற்றிருந்தனர். 3 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அமைந்தது. புதுச்சேரியின் முதன்முதலாக அமைச்சரவையில் பாஜக இடம் பிடித்தது.

கூட்டணி ஆட்சியில் பேரவைத் தலைவர் பதவி மற்றும் இரு அமைச்சர்கள் பாஜக தரப்பில் இருந்து நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பாஜக மாநிலத்தலைவராக இருந்த சாமிநாதன் நீண்ட ஆண்டுகள் இப்பொறுப்பில் இருந்ததால், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இச்சூழலில் பாஜக எம்எல்ஏ-க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாண சுந்தரம் தொடங்கி ஆதரவு தந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேர் உள்ளிட்டோர் அமைச்சர், வாரியத் தலைவர் பதவிகளை கேட்டனர். ஆனால் முதல்வர் ரங்கசாமி அவர்கள் கேட்டபடி பதவியைத் தரவில்லை- பாஜக மேலிடம் சொல்லியும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி தலைமையில் பாஜக புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலை சந்தித்து, தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியைத் தொடர்ந்து அமைச்சர், வாரியத் தலைவர் பதவிகளை கேட்டு கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் அதிருப்தி யை தீவிரமாக வெளிக்காட்டத் தொடங்கினர். ஆளுநர் தொடங்கி டெல்லி வரை சென்று புகார் அளித்தனர்.

புதுச்சேரி பாஜகவில் மாநிலத் தலைவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. போராடிய தொண்டர்கள், சில நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். வெளிப்படையாகவே முன்னாள் தலைவர், தற்போதைய தலைவரை விமர்சித்தார். இதுபோல பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்து அரசுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிரான தங்களின் எதிர்ப்பை, ‘எங்களின் உரிமை’ என்ற பெயரில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே பாஜக அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமாரும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

இதற்கு மத்தியில் பாஜக தொண்டர்களும், தங்களது ஆட்சி புதுச்சேரியில் வந்தும் தங்களுக்கு ஏதும் பயனில்லை என்ற அதிருப்தியில் உள்ளனர். கட்சி வட்டாரத்தில் இதுபற்றி விசாரித்தபோது, "முன்பெல்லாம் தொகுதி வாரியாக கூட்டம் நடக்கும். நிர்வாகிகள் தலைவரை சந்திக்கலாம். தற்போது அதுபோல் இல்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக சென்றாலும் கட்சி தரப்பில் ஆதரவில்லை" என்று வெளிப்படையாகவே குறிப்பிடு கின்றனர்.

தற்போது நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அமைப்பு தேர்தல் நடத்தி பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் தொகுதி, மாவட்ட அளவில் நிர்வாகிகள் தேர்வானார்கள். ஆனால் மாநிலத் தலைவரைத் தேர்வு செய்வதில் தொடர்ந்து பாஜக தலைமை தாமதிக்கிறது.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. தேர்தலைச் சந்திக்கும் வகையில் மாநிலத் தலைவரை நியமிக்க பாஜக தலைமை உறுதியாக உள்ளது. புதுச்சேரியில் தற்போதுள்ள சூழலில் கடந்த சில மாதங்களாகவே புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றே பாஜக தரப்பில் கூறி வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் நேற்று புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வ கணபதி சந்தித்து பேசியுள்ளார்.

இதுபற்றி அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற விதி உள்ளது. அமைச்சர் நமச்சிவாயம் தரப்பிலோ அமைச்சர் பதவியோடு தலைவர் பதவியும் தர கோருகின்றனர். அத்துடன் அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோரும் தலைவர் பதவிக்கு முயற்சிக் கின்றனர். அத்துடன் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்திக்கும் பாஜக எம்எல்ஏக்களில் சிலர் ஆதரவு தருகின்றனர். எனினும் கட்சித் தலைமைதான் இதில் முடிவு எடுக்கும்" என்று தெரிவிக்கின்றனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக செல்வகணபதி தரப்பில் விசாரித்தபோது, புதுச்சேரியில் பாஜகவின் செயல்பாடுகள், புதுச்சேரியில் தற்போதுள்ள சூழல், கட்சியின் நிலை தொடர்பாக மாநிலத் தலைவர் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தாக தெரிவித்தனர். ஆனால், ‘இந்த சந்திப்பு மாநிலத் தலைவரை மாற்றுவதற்கான நடவடிக்கையே!’ என்று கட்சித் தரப்பில் தொண்டர்களிடையே பரவலான பேச்சு அடிபடுகிறது.

x