ஆண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து புதுச்சேரியில் அரசு பள்ளிகள் திறப்பு!


படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமில் ஆண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து. அரசு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு, பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கடந்த 2024-25-ம் கல்வி ஆண்டில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் முதன் முறையாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இதனிடையே 1 முதல் 9-ம் வகுப்பு வரையும் மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதிக்குள் ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, விடுமுறை விடப்பட்டது. ஆண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமில் உள்ள அரசு பள்ளிகள் நேற்று (ஏப்.1) மீண்டும் திறக்கப்பட்டது.

பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள எக்கோல் அரசு தொடக்கப் பள்ளியில் காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு, பலூன், பேனா கொடுத்து வரவேற்றனர்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை வழிபாடு நடத்தப்பட்டு பிறகு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன. மேலும், கடந்தாண்டு படித்த மாணவர்களிடமிருந்து தேர்வு நடைபெறும் போது ஆசிரியர்கள் வாங்கி வைத்திருந்த பாடநூல்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி முதல்நாள் வகுப்பை ஆசிரியர்கள் நடத்தினர்.

2025-26ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கக் கூடும் என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்தனர். நேற்று திறக்கப்பட்ட அரசு பள்ளிகள் வருகிற 30-ம் தேதி வரை தொடர்ந்து இயங்கும்.

மே 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜூன் 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதே போல் ஏற்கெனவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றி வரும் தனியார் பள்ளிகளுக்கும் மேற்கண்ட முறையில் விடுமுறை விடப்பட்டு, நேற்று திறக்கப்பட்டன.

x