தஞ்சாவூர்: கோயில் திருவிழாவில் சாதி சமூக குழுக்களின் பெயர்களை அச்சிட தடை விதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரும் மனு தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,100 ஆண்டுகள் பழமையான பருத்தியப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களால் பங்குனி மாதத்தில் கோயில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த 18 கிராம மக்களும் மேலக்கரை, கீழக்கரை, தெற்குக்கரை என 3 குழுக்களாக பிரிந்து விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில், கோயில் திருவிழாக்களில் குறிப்பிட்ட சாதியின் பெயரோ, சமுதாயக் குழுக்களின் பெயரோ குறிப்பிடப்படக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கோயில் திருவிழாக்களில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் குறிப்பிடும் வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அறநிலையத் துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையாணை பெறப்பட்டுள்ளது. கோயில் திருவிழாக் களில் குறிப்பிட்ட சாதி, சமூக குழுக்களின் பெயர்கள் அச்சிடப்படக்கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளதால், அறநிலையத் துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.