கரூர் ஜெ. பேரவை நிர்வாகி கைது; காவல் நிலையத்தில் திரண்ட அதிமுகவினர் - களத்தில் குதித்த விஜயபாஸ்கர்!


கரூர்: ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி கோவிந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் அருள் (49). ஜெயலலிதா பேரவை தாந்தோணி மேற்கு ஒன்றிய துணைத் தலைவர். இவர், தனது வீட்டருகே கிராவல் மண்ணை குவித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி செயலர் பழனிச்சாமி கேள்வி எழுப்பியதையடுத்து, அவருக்கும், அருளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இது குறித்து பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் கரூர் நகர போலீஸார் நேற்று முன்தினம் அருளை காவல் நிலையம் அழைத்துச் சென்று, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்தனர்.

தகவலறிந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் வை. நெடுஞ்செழியன் உள்ளிட்ட அதிமுகவினர் 100-க்கும் அதிகமானோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். தொடர்ந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக வழக்கறிஞர் கள், போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஜாமீனில் அருள் விடுவிக்கப்பட்டார்.

பின்னர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது: வீட்டு வேலைக்கு பணம் கொடுத்து கிராவல் மண்ணை வாங்கி வீட்டில் வைத்திருந்த அருள் மீது ஆளுங்கட்சியினர் தூண்டுதலின்பேரில் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். கரூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினர் மூலம் இரவு நேரங்களில் ஆற்று மணல் கொள்ளை நடைபெறுகிறது. மேலும், கஞ்சா விற்பனையா கிறது. ஆனால், அதையெல்லாம் தடுக்காத போலீஸார், அதிமுகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார். அப்போது, இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும் என்றார்.

x