ஓராண்டுக்குப் பின் நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு; நூற்பாலைகள் அறிவிப்பு


திருப்பூர்: ஓராண்டுக்குப்பின் நடப்பு ஏப்ரல் மாதத்துக்கான முதல் 15 நாட்களுக்கு நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன.

திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. பின்னலாடைத் தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து, ஆடைகளை தயாரிப்பில் ஈடுபடுவது வழக்கம்.

நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் 15 நாட்களுக்கு ஒருமுறை நூல் விலையை நூற்பாலைகள் அறிவிக்கின்றன. ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன.

அதன்படி, 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.178, 16-ம் நம்பர் ரூ.188, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.246, 24-ம் நம்பர் ரூ.258, 30-ம் நம்பர் ரூ.268, 34-ம் நம்பர் ரூ.286, 40-ம் நம்பர் ரூ.306, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.243, 24-ம் நம்பர் ரூ.253, 30-ம் நம்பர் ரூ.263, 34-ம் நம்பர் ரூ. 276, 40-ம் நம்பர் ரூ.296 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் கூறியதாவது: ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு நூல் விலை ரூ.3 உயர்ந்துள்ளது. கடந்த காலங்களைபோல் படிப்படியாக நூல் விலையை மீண்டும் உயர்த்தக் கூடாது. சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா தடை, வங்க தேச நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் இந்தியாவுக்கான ஆர்டர்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன.

இச்சூழலில், சிறிய விலையேற்றம் என்பது லேசான பாதிப்பாக இருந்தாலும், வரும் நாட்களில் நூல் விலையை அபரிமிதமாக உயர்த்தக் கூடாது. நூல்விலை சீரான நிலையில் இருந்தால்தான், தொழில் ஆர்டர்களும் சுமுகமான நிலையில் இருக்கும். மின் கட்டணம் உள்ளிட்டவற்றில் பல்வேறு சலுகைகளை வழங்கி ஊக்கப்படுத்தினால் மட்டுமே தொழில் துறை மேலும் வலுப்பெறும், என்றார்.

x