சென்னை: சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் சொத்து மதிப்பை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. புதிதாக உருவாக்கவுள்ள மனைப்பிரிவு மதிப்பு நிர்ணயம் செய்வதற்காக மாவட்ட பதிவாளார் அலுவலகத்துக்கு மனு அனுப்பினால், மனைப் பிரிவுக்கு மதிப்பு நிர்ணயம் செய்ய உள்ள சர்வே எண்ணைச் சுற்றியுள்ள மதிப்பில் எது அதிகப்பட்ச மதிப்பு உள்ளதோ அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்து கொடுப்பது நடைமுறையில் உள்ளது.
ஆனால், ஏற்கெனவே வழிகாட்டி மதிப்பை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தியுள்ள நிலையில், மீண்டும் மாவட்டப் பதிவாளர் நிர்ணயம் செய்ய வேண்டிய மதிப்பில் இருந்து மேலும் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சேர்த்து அதிகபட்சமாக மதிப்பு நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்களின் கனவு நிறைவேறாமல் போகிறது.
சொத்து மதிப்பை மீண்டும் மீண்டும் அதிகப்படுத்துவதால் மக்களுக்கு சுமை கூடுகிறது. மேலும், இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஆகவே, தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவைக் கைவிட வேண்டும். இவ்வாறு ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.