மல்லிகை பூவில் மதிப்பு கூட்டுப் பொருட்கள்: காவேரிப்பட்டணத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி


மல்லிகை பூவில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்க காவேரிப்பட்டணத்தில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரி மாணவிகள் தங்களின் பணி அனுபவத்துக்காகக் காவேரிப்பட்டணத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் காவேரிப்பட்டணம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, மல்லிகைப் பூவில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளித்தனர். இதில், மல்லிகை எண்ணெய், மல்லிகை கான்கிரீட் (மல்லிகைப் பூவிலிருந்து கரைப்பான் மூலம் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்), அகர்பத்தி தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக மாணவிகள் கூறியதாவது:

மல்லிகை பூ எண்ணெய், அரோமாதெரபி (நறுமண எண்ணெய்) ஆகியவை அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பயன்களுக்கு அதிக தேவை உள்ளது. ஒரு லிட்டர் உயர்தர மல்லிகை எண்ணெய் சர்வதேச சந்தைப் மதிப்பு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளது. மல்லிகை கான்கிரீட் வாசனைத் திரவியங்கள் மற்றும் வாசனைத் திரவிய எண்ணெய்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் அதிக தேவை உள்ளது. மல்லிகை அகர்பத்தி, பண்டிகைகள், வழிபாட்டுக்குத் தேவைப்படுகிறது.

எனவே, மல்லிகையை பூவாக மட்டும் விற்பனை செய்யாமல், இவற்றை மதிப்புக் கூட்டுப் பொருட்களாகத் தயாரித்து அதிக வருமானம் ஈட்டலாம். மேலும், மல்லிகை சார்ந்த தயாரிப்புகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பெரும்பாலும் பிரான்ஸ், யுஎஸ்ஏ மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

x