பொம்மிடியில் ரயில் வருகை குறித்து தமிழிலும் ஒளிபரப்ப வேண்டும்: பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை


தருமபுரி: பொம்மிடி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பலகையில் ரயில் வருகை குறித்து தமிழிலும் ஒளிபரப்ப வேண்டும், என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள ரயில் நிலையம் ரூ.16 கோடி மதிப்பில் மத்திய அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக சில அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேணடும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தென்னக ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் சங்க நிர்வாகிகள் காமராஜ், அறிவழகன் ஆகியோர் கூறியதாவது:

பல்வேறு மேம்பட்ட வசதிகளுடன் தற்போது காட்சி தரும் பொம்மிடி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் வருகை குறித்த டிஜிட்டல் பலகையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. தமிழிலும் ஒளிபரப்ப வேண்டும். பொம்மிடி ரயில் நிலையத்தைச் சுற்றி தற்போது புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரில் போஸ்டர்கள், விளம்பரங்கள் எழுதுவதை தடுக்கும் வகையில் அறிவு சார்ந்த விஷயங்கள், இந்திய ரயில்வேயின் வரலாறு குறித்த செய்திகளை ஓவியங்களாக வரைய வேண்டும்.

முகப்பு பகுதியில் பிரம்மாண்டமான தேசியக்கொடி, சுவர் கடிகாரம், அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள், ஒலிபெருக்கி ஆகியவற்றை நிறுவ வேண்டும். வாரத்தில் 5 நாள் இயக்கப்படும் சேலம்-அரக்கோணம்-சேலம் இடையிலான மெமு ரயில் கடந்த ஜனவரி 20-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் மருத்துவ வசதிக்காகவும், வணிக நோக்கத்திற்காகவும் சேலம் செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த ரயிலை மீண்டும் இயக்குவதுடன் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

x