ஈரோடு யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளர் விருது; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்!


ஈரோடு: முனைவர் வ.சு.யசோதா நல்லாளுக்கு, 2024-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளர் விருது கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடக்குப் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வ.கோ.சுப்பிரமணியம். இவரது மகள் வ.சு.யசோதா நல்லாள் (37). கோவை பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்ற இளம் எழுத்தாளரான இவர், சங்க இலக்கியத்தில் கண்கள் எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வும் , கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆய்வில் (அமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம்) கவுரவ முனைவர் பட்டமும் பெற்றவர்.

பன்னிரு திருமுறைகளான தேவாரம் மற்றும் திருவாசகம் முதலியவற்றை முறையாகப் பயின்றவர். இவர் அண்மையில் எழுதிய வீரசைவ மரபு என்னும் நூல் பலரின் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றி வரும் இவருக்கு, 2024-ம் ஆண்டுக்கான தூய தமிழ் பற்றாளர் விருது, தமிழ்நாடு அரசால் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டத்திற்கு ஒருவரை தேர்வு செய்து ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. பிறமொழி கலவாமல் பேசுவது, தமிழ் நூல், படைப்புகள் எழுதி இருப்பதோடு, தமிழ் புலமை உள்ளவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

சென்னையில் நடந்த விழாவில், செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இந்த விருதினை வழங்கினார். இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், செயலாளர் வே.ராஜாராமன், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்குநர் (பொறுப்பு) க. பவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற வ.சு.யசோதா நல்லாள் கூறியதாவது: கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் படித்த எனக்கு தமிழ்துறை தலைவர் பேராசிரியர் க.திருநாவுக்கரசு, தமிழ் ஆய்வு மற்றும் நூல்களை எழுத வழிகாட்டியாக இருந்து உதவினார். தூய தமிழ் பற்றாளர் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தேன். எனது தமிழ்புலமை, சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்து, தூய தமிழ் பற்றாளர் விருது மற்றும் ரூ 20 ஆயிரம் ரொக்கம் பரிசாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழ் மொழி புலமையை ஊக்குவிக்கும் வகையில் இவ்விருது கிடைத்துள்ளது எனக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x