ஈரோடு: அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மாரியம்மனுக்கு ஆலயம் அமைக்க வலியுறுத்தி, ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சார்பில் 5,008 தீர்த்த குட ஊர்வலம் நடந்தது.
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் இருந்து புறப்பட்ட தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணகான பெண்கள் தீர்த்தக்குடத்துடன் பங்கேற்றனர். ஊர்வலமானது, திருவேங்கடசாமி வீதி வழியாக பெரிய மாரியம்மன் கோயிலைச் சென்றடைந்தது. அதன்பின் ஊர்வலத்தில் பங்கேற்றோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்க தலைவர் ஈஆர்எம் சந்திரசேகர், துணைத் தலைவர் கைலாசபதி, பொருளாளர் ராஜ் கண்ணன், பொதுச் செயலாளர் சரவணன் ஆகியோர் கூறியதாவது: ஈரோட்டில் மந்தை வெளி மாரியம்மன் வீற்றிருந்த, ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் அரசு ஆவணங்களில், அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குறிப்பிட்ட 12.66 ஏக்கர் நிலம், சட்ட விரோதமாக சிஎஸ்ஐ நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. இதனால், மாரியம்மன் கோயில் பண்டிகை காலங்களில், பொங்கல் வைக்கவோ, கோயில் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தவோ, இடம் இல்லாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்,
எனவே, சிஎஸ்ஐ நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு காலம் தாழ்த்தாமல் கையகப்படுத்த வேண்டும். அந்த இடத்தில், ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு ஆலயம் அமைத்திடவும், கோயில் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்திடவும், 80 அடி திட்டச்சாலையை விரைந்து நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.