உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் வட்டாரத்தில் தாந்தோணி, துங்காவி, மெட்ராத்தி, மைவாடி, சங்கராமநல்லூர் ஆகிய கிராமங்களில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்பூசணி பழங்களில் நிறத்துக்காகவும், பழுக்க வைக்கவும் ஊசி மூலம் மருந்து செலுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து, மடத்துக்குளம் வட்டாரத்தில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு, ஊசி மூலம் தர்பூசணியை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென விவசாயிகளை எச்சரித்துள்ளனர்.
இது குறித்து, மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநர் சசிகலா அறிவுறுத்தல்படி, மடத்துக்குளம் வட்டாரத்தில் தர்பூசணி பயிரிட்ட நிலங்களில் ஆய்வு நடைபெற்றது. அறுவடை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் டன் கணக்கில் இருப்பதால், அவற்றில் எவ்வித நிறமிகளையும் கலக்க முடியாது. ஊசி செலுத்தி தர்பூசணியை பழுக்க வைக்கவும் முடியாத சூழல் உள்ளது. தர்பூசணி பழங்களை சுவைத்துப் பார்த்ததில், எவ்வித கலப்படமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது, என்றார்.