உடுமலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பூட்டு: அவசர சிகிச்சை பெற முடியாமல் மக்கள் தவிப்பு


படம்: எம்.நாகராஜன்

திருப்பூர்: உடுமலை நகரின் மையப் பகுதியாக உள்ள வக்கீல் நாகராஜன் சாலையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திடீரென பூட்டப்பட்டது. ஊழியர்கள் யாரும் யாரும் பணியில் இல்லாததால், சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக தாய்சேய் நல விடுதி என்ற பெயரில் நகராட்சி கட்டுப்பாட்டில் இம்மையம் செயல்பட்டது. பின்னர் சுகாதாரத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. நகராட்சி வசம் இம்மையம் இருந்தபோது, ஆணையாளர் அல்லது நகராட்சி தலைவர் ஆகியோரது கண்காணிப்பு இருந்தது. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து பணியாளர்களும் முறையாக பணிக்கு வந்து செல்வது உறுதி செய்யப்பட்டது.

சுகாதாரத் துறைக்கு மாற்றப்பட்ட பின் இந்த மையம் முறையாக திறக்கப்படுகிறதா, பணியாளர்கள் வருகை, முறையாக செயல்படுகிறதா என அதிகாரிகள யாரும் கண்காணிப்பதில்லை. பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை, தொடர் அரசு விடுமுறை நாட்களில் முன் அறிவிப்பு இன்றி சுகாதார நிலையம் பூட்டப்படுகிறது. அவசர மருத்துவத் தேவைக்காக வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலையுள்ளது. 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என சுகாதார நிலையம் முன்பு பெயர்ப் பலகை வைத்துவிட்டு, விடுமுறை நாட்களில் பூட்டிச் செல்வது குறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும், என்றனர்.

இது குறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது: மருத்துவமனைக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் பொதுவிடுமுறை கிடையாது. 24 மணி நேரமும் இயங்க வேண்டும். இதுதான் அரசு விதி. மேற்படி சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். ஒருவேளை அவர் விடுப்பில் சென்றிருந்தால், சீனியர் செவிலியர் பணியில் இருந்திருக்க வேண்டும். டிடி தடுப்பூசி போடுவது, காயங்களுக்கு மருந்து கொடுத்து கட்டுப்போடுவது ஆகிய பணிகளை செய்யவும், மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வும் சீனியர் செவிலியர் பணியில் இருக்க வேண்டும். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

x