கோவை: தேங்காய் விலை உயர்வு காரணமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொப்பரை உற்பத்தி குறைந்து, உலர்களங்கள் தொழிலாளர்கள் இன்றி காணப்படுகின்றன.
தமிழகத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடியில் அதிக அளவிலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தியாகும் தேங்காய், கொப்பரை பருப்பு மற்றும் இளநீர், இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மழைப் பொழிவின்றி, வறட்சி, வெள்ளை ஈ தாக்குதல், வேர்வாடல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது தேங்காய், கொப்பரை விலை உயர்ந்தாலும், நோய் தாக்குதல் காரணமாக தென்னையில் மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தேங்காய் உற்பத்தி சீசன் தொடங்கினாலும், உற்பத்தி குறைந்து தேங்காய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் கொப்பரை உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்பதால், கொப்பரை உற்பத்தியாளர்கள் கொப்பரை பருப்பு உற்பத்தியை தொடங்கவில்லை. இதனால், கொப்பரை உலர்களத்தில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதுகுறித்து கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறும்போது, ”தற்போது ஒரு கிலோ கொப்பரை ரூ.175 ஆகவும், ஒரு டன் தேங்காய் ரூ.66 ஆயிரம் வரை விற்பனையாகிறது. வெள்ளை ஈ தாக்குதல், கேரள வாடல் நோய், வறட்சி ஆகியவற்றால் கொப்பரை உற்பத்தி 60 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதேநேரம் கொப்பரை விலை உயர்ந்து வருகிறது. தேங்காய் உற்பத்தி சீசன் தொடங்கிய நிலையில் கொப்பரை, தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
இதனால் தேங்காய் வாங்கி, கொப்பரை உற்பத்தி செய்தால் கிலோவுக்கு ரூ.190 முதல் ரூ.200 வரை விலை கிடைக்கும். பல்வேறு செலவினங்களை கணக்கிட்டால் நஷ்டம் தான் ஏற்படும். எனவே, கொப்பரை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், நெகமம், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500- க்கும் மேற்பட்ட கொப்பரை உலர் களங்கள் உற்பத்தி இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் தென்னை விவசாயம் அழிந்து விடும், என்றனர்.