கோவை: மருதமலை முருகன் கோயிலில், வரும் 4-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையடுத்து நேற்று மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, திருமறை, திருமுறை பாராயணம் உள்ளிட்டவை நடந்தது. மேலும், கோயிலில் உள்ள கோபுரங்கள் மீது கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. பிரதான கோபுரமான, ராஜகோபுரத்தின் மீது நேற்று 7 கலசங்கள் அடுத்தடுத்து பொருத்தப்பட்டன. ஓதுவார்கள் மங்கள மந்திரங்களை முழங்கி கலசம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து அந்த கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் மீதம் உள்ள சந்நிதிகளுக்கும் தனித்தனியாக கலசங்கள் பொருத்தப்பட்டன. ராஜகோபுரத்தை தவிர, மீதம் உள்ள சந்நிதிகளுக்கு ஒரு சந்நிதிக்கு ஒரு கலசம் என மொத்தம் 11 கலசங்கள் பொருத்தப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேகத்தையொட்டி, சுவாமிக்கு முதற்கால யாகவேள்வி இன்று மாலை தொடங்குகிறது.
கோயிலில் உள்ள திருச்சுற்று தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல், முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருளச் செய்தல், மூலாலயத்தில் இருந்து யாகாலயத்துக்கு திருக்குடங்கள் எழுந்தருளுதல் உள்ளிட்டவையும் நடக்க உள்ளன. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக தினம் வரை தினமும் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. வரும் 4-ம் தேதி 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
விழாவில், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பெங்களூரு வேத விஞ்ஞான மஹா வித்யா பீடத்தின் பரமபூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேக விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.