நாகை: திட்டச்சேரியில் நேற்று ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்கு சென்று திரும்பியபோது நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி புதுமனை தெருவைச் சேர்ந்தவர் முகமது உஸ்மான் மகன் முகமது தவுபிக்(19). இவர், நாகையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். திட்டச்சேரி புடவைகாரத் தெருவைச் சேர்ந்த தஸ்லீம் மகன் முகமது பாரிஸ்(13). இவர் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் நேற்று காலை திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்புத் தொழுகையை முடித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வாகனத்தை முகமது தவுபிக் ஓட்டினார்.
திட்டச்சேரி பிரதான சாலை கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி அருகில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அங்கிருந்த சுவற்றின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தோர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தவுபிக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் முகமது பாரிஸை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து திட்டச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.