மக்கள் வராமல் வெறிச்சோடிய மாநகராட்சி மண்டல குறைதீர்கூட்டம்: மதுரையில் நீடிக்கும் பனிப் போர்  


மதுரை: பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க ஆர்வம் காட்டாததால் மதுரை மாநகராட்சி 2வது மண்டலம் அலுவலகத்தில் இன்று நடந்த குறைதீர் கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.

மண்டல நிர்வாகம், கவுன்சிலர்களுக்கும், பொதுமக்களுக்கும் முறையாக தகவல் தெரிவிக்காததால் கடைவிரித்தேன், கொள்வாரில்லை என்ற கதையில் மக்கள் வருகை எதிர்பார்த்து மேயர், அதிகாரிகள் காத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு புதிய சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், கட்டிட வரைப்பட அனுமதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், தெருவிளக்கு மற்றும் தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை தெரிவித்து உடனுக்குடன் நிவாரணம் பெற வாரந்தோறும் ஒவ்வொரு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மாநகராட்சி மேயர், ஆணையாளர் நேரடியாக இந்த முகாமில் பங்கேற்று பொதுமக்கள் வழங்கும் மனுக்களை பெற்று அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சம்பவ இடத்திலேயே அறிவுறுத்துவார்கள்.

அதனால், பொதுமக்கள் வழங்கும் நியாயமான மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதே முகாமில் நிவாரணமும் வழங்கப்பட்டது. அதனால், பொதுமக்களிடம் மண்டல அலுவலங்களில் நடத்தப்படும் குறைதீர் கூட்டங்களுக்கு கடந்த காலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக, மண்டல அலுவலகங்களில் இந்த குறைதீர் கூட்டங்கள் முறையாக நடப்பதில்லை. குறைதீர்கூட்டங்கள் நடத்துவதாக அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்த தகவல் சென்றடையாததால் பொதுமக்கள் மனுக்களுடன், மண்டல அலுவலகங்களுக்கு வந்து ஏமாந்து செல்கிறார்கள்.

அப்படியே இந்த குறைதீர் கூட்டங்கள் நடத்தாலும், மண்டல தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள், வட்டச்செயலாளர்கள் சிபாரிசு செய்யும் மனுக்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்கள் இக்கூட்டங்களுக்கு முறையாக அழைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கடந்த காலத்தில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுவது குறித்து பொதுமக்களுக்கு நாளிதழ்களில் மட்டுமில்லாது, மாநகராட்சிப் பணியாளர்கள் ஆட்டோக்களில் சென்று ஒலிப்பெருக்கி மூலமும் தகவல் தெரிவிப்பார்கள்.

ஆனால், சமீப மாதங்களாக இந்த நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படாததால் இந்த குறைதீர் கூட்டங்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இது இன்று காலை மதுரை மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் நடந்த குறைதீர்கூட்டத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய பொதுமக்கள் மட்டுமே வந்தனர். கவுன்சிலர்களுக்கு கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் தகவல் தெரிவிக்காததால் கடைசி நேரத்தில் அவர்களால் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து அழைத்து வர முடியவில்லை. இம்மண்டலத்திற்குட்பட்ட 21 கவுன்சிலர்களில் 6 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

கடைசி நேரத்தில் தகவல் தெரிந்து குறைதீர்கூட்டத்திற்கு வந்திருந்த திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர் ஒருவரே, திமுக வட்டச் செயலாளருக்கு இருக்கும் மரியாதை கூட தங்களுக்கு இல்லை, யாரிடம் முறையீடுவது'' என்று புலம்பியபடி சென்றார். 'கடை விரித்தேன் கொள்வாரில்லை,' என்பது போல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே பொதுமக்கள் வந்ததால் 2வது மண்டல அலுவலகத்தில் நடந்த குறைதீர்கூட்டம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் மனுக்களுடன் வருகிறார்களா? என்று வழிமேல் விழி வைத்து மேயர், மண்டலத்தலைவர், அதிகாரிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுகையில், ''மாநகராட்சி மேயர், இக்குறை தீர் கூட்டங்களில் பங்கேற்பதோடு சரி, அவர் மண்டல அலுவலக நிர்வாகங்களில் தலையிடுவது இல்லை. அதனால், மண்டல அலுவலங்களில் மண்டலத்தலைவர்கள் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள். அதுவும், குறிப்பாக மூன்று பெண் மண்டல தலைவர்கள் உள்ள மண்டல அலுவலங்களில் அவர்களுடைய கணவர்கள் வைத்ததே சட்டம் என்பது போல் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தங்களை மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி, பழனிவேல் தியாகராஜனின் நெருங்கிய ஆதரவாளர்களாக தங்களை காட்டிக்கொள்வதால் அவர்களை மாநகராட்சி மேயரும், அதிகாரிகளும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவர்கள் இது போல் மக்கள் நேரடியாக மேயர், ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்து தீர்வு காண்பதை சில மண்டலத் தலைவர்களும், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் மண்டல அதிகாரிகளும் விரும்பவில்லை. ஒவ்வொரு மனுவும், சம்பந்தப்பட்ட பெண் மண்டலத்தலைவர்களுடைய கணவர்கள் 'கை'க்கு சென்றபிறகே தீர்வு காணப்படுகிறது,'' என்றனர்.

கடந்த காலத்தில் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்ற, உடனுக்குடன் தீர்வு காணப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த மண்டல குறைதீர்கூட்டங்கள் நடத்தப்படுவதில் உள்ள குறைபாடுகளையும், தடைகளையும் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கவுன்சிலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மண்டலத்தலைவர் சரவணபுவனேஷ்வரி, ''27 பேர் மனு கொடுத்திருந்தனர். தொடர்விடுமுறை என்பதோடு, முதல்வர் நாளை வர இருப்பதால் கட்சியினர், அதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருந்ததால் மக்களை அழைத்து வர முடியவில்லை,'' என்றார்.

x