திருச்சி பால் பண்ணை- துவாக்குடி அணுகு சாலை திட்டத்தை காப்பாற்ற வேண்டும்!


திருச்சி: தஞ்சாவூர் நெடுஞ்சாலையில், பால் பண்ணை முதல் துவாக்குடி வரையிலான அணுகுசாலை திட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என திருச்சி பால்பண்ணை- துவாக்குடி சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, அவர்கள் பதிவு அஞ்சலில் அனுப்பிய கோரிக்கை: திருச்சி- தஞ்சாவூர் சாலை 2006-ல் நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், பால் பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5 கி.மீ. தொலைவுக்கு அணுகு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படாததால் அணுகு சாலை அமைக்கப்படவில்லை.

இப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்கள், முறையீடுகளைத் தொடர்ந்து, அணுகு சாலை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு 2011-ல் அரசாணை பிறப்பித்த நிலையில், இதனடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை 2014-ல் அறிவிப்பு வெளியிட்டது.

இதனிடையே, இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், அணுகு சாலை திட்டத்தை 6 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என 2019, அக்.15-ம் தேதி உத்தரவிட்டது.

இதனடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை திருத்திய திட்டத்தில், குறைந்தபட்சம் சாலையின் அகலம் 45 மீட்டர் என தயாரித்து, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையாக நில ஆவணங்களை சரிபார்க்கும் பணி 2021, பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. ஆனால், அதன்பிறகு இந்தத் திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக எந்தப் பணியும் நடைபெறவில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் தமிழக நிதித் துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் அகலத்தை மேலும் குறைத்து, அணுகு சாலை திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி தேசிய நெடுஞ்சாலையின் அகலம் 60 அடியாக இருக்க வேண்டும். ஆனால், திருச்சி- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில், பால் பண்ணை முதல் துவாக்குடி வரை ஏற்கெனவே சாலை குறுகலாக உள்ளது. இதனிடையே, 2019-ல் சாலையின் அகலத்தை 45 மீட்டராக குறைத்து அறிவித்த நிலையில், தற்போது மேலும் குறைக்க திட்டமிட்டிருப்பது, இந்தச் சாலைத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும். எனவே, இந்தச் சாலை தொடர்பான வழக்கில் 2019-ல் மதுரை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.

x