திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் சிறப்பு கவிதை கருத்தரங்கம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்து பேசியது: ஒரு தடவை கூட மக்களை சந்திக்காமல், கூட்டரங்கிலேயே கூட்டம் நடத்திக்கொண்டு முதல் எதிரியே திமுக தான் என அண்மையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கூறுகிறார். இதேபோல, 2014 முதல் போராடி ஒரு இடம் கூட பிடிக்காத பாஜக, அவர்களுடன் கூட்டணி கிடையாது எனக்கூறிக்கொண்டு மீண்டும் அவர்களிடமே சேர்ந்திருக்கும் அதிமுக என அனைவரையும் சந்திக்க நாம் தயாராகவே உள்ளோம்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய மண்டலத்தில் உள்ள 44 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4 தவிர அனைத்திலும் வெற்றி பெற்றோம். வரும் தேர்தலிலும் அனைத்திலும் வெற்றி பெறுவோம் என்றார்.
இதேபோல, அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆகியோர் பேசினர். விழாவில், எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், அருண் நேரு, மேயர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.