திருச்சி: ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரையில், மாநகராட்சி சார்பில் ரூ.75 லட்சம் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டும், முழுமையாக செயல்பாட்டுக்கு வராததால், கொள்ளிடம் ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலந்து வருகிறது. இதன் காரணமாக கொள்ளிட ஆற்றில் சலவைத் தொழில் செய்யும் தொழிலாளிகள் தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கத்தில் 2010-ம் ஆண்டிலேயே பெரும்பாலான இடங்களில் புதை சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், ஸ்ரீரங்கத்தின் விரிவாக்கப் பகுதிகள் மற்றும் திருவானைக்காவலில், புதை சாக்கடை விடுபட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆங்காங்கே உள்ள திறந்தவெளி கால்வாய்கள், நாட்டு வாய்க்கால் மூலம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வடிகால் வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலந்து வருகிறது.
இதனால், அங்கு துணி துவைக்கும் சலவைத் தொழிலாளர்கள், ஆற்றில் குளிக்க வரும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்காமல், சுத்திகரித்து விட வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படாத காரணத்தால், மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம் கூறியது: ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, ரூ.75 லட்சம் மதிப்பில் 3500 சதுர அடி பரப்பளவில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் திறந்தவெளி வடிகால் வழியாக வெளியேறும் கழிவு நீரானது சேகரிக்கப்பட்டு, 'ஓசோன் லேயர்' எனப்படும் புதிய தொழில்நுட்பம் மூலம் தூய்மையாக்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையில் உள்ள ஸ்டெம் செல் பூங்காவின் உள்ள மரம், செடி, கொடிகளுக்கு பயன்படுத்தப் படும். மீதமுள்ள தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் விடப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை முழுமையாக செயல்படவில்லை. இதனால், கொள்ளிடக் கரையோர மக்களின் அவஸ்தைகள் தொடர்கின்றன. குறிப்பாக, சலவைத் தொழிலாளர்களின் கை, கால்களில் சொறி, சிரங்கு, அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், வடகாவிரி என்று போற்றப்படும் கொள்ளிடம் ஆற்றில் பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, உடனடியாக கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் கேட்டபோது, ‘‘கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் சோதனை அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்’’ என்றனர்.