வேட்டவலம் பேருந்து நிலையம்; தனியார் வாகனங்களின் ‘பார்க்கிங்’ இடமாக மாற்றம்


திருவண்ணாமலை: வேட்டவலம் பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையம் உள்ளே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்ல மறுப்பதால், தனியார் வாகனங்களின் பார்க்கிங் இடமாக காட்சியளிக்கிறது.

மாநகராட்சி, நகராட்சிகளுக்கு இணையாகப் பேரூராட்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, பயணிகளின் நலன் கருதி ‘பேருந்து நிலையம்’ அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் வந்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட பேருந்து நிலையங்கள் ‘காட்சிப் பொருளாக’ உள்ளன. இந்த வரிசையில், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சியில் அமைந்துள்ள பேருந்து நிலையமும் இடம்பெற்றுள்ளது.

திருவண்ணாமலை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வேட்டவலம் பேரூராட்சி உள்ளது. புதுச்சேரி மாநிலம், தென்னாற்காடு மற்றும் தென் மாவட்ட ஊர்களை இணைக்கும் வழித்தடத்தில் உள்ளது. இதனால், வேட்டவலம் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். ஆனால், திருவண்ணாமலையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தை எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. திருவண்ணாமலை மற்றும் திருக்கோவிலூர் இடையே இயக்கப்படும் ஓரிரு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும், பேருந்து நிலையத்தை எட்டிப் பார்க்கிறது. அதுவும் பேருந்துகளைத் திருப்புவதற்கான இட வசதி உள்ளதால், வர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வேட்டவலம் பேருந்து நிலையம் உள்ளே பேருந்துகள் செல்லாததால், தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. கார், வேன் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி நிறுவன வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. இதில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தும் வாகனங்களையும் காணலாம். வேட்டவலம் வழியாகச் செல்லும் பேருந்துகளுக்குச் சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. இதேபோல், பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் வரி வசூலிக்கப்படலாம்.

பேருந்து நிலையம் உள்ளே பேருந்துகள் செல்லாததால், பேருந்து நிலையம் முன்பும், காந்தி சாலையில் உள்ள 2 பேருந்து நிறுத்தங்களில் வெயில் மற்றும் மழையில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காந்தி சாலையில் இடநெருக்கடி உள்ளதால், பேருந்து நிறுத்த நிழற்குடை கட்ட முடியாத சூழல் உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள கடைகள் முன்பு பயணிகள் தஞ்சமடைகின்றனர். மக்களின் வரிப் பணத்தில் கட்டப்பட்டும், பேருந்து நிலையம் பயனற்று கிடக்கிறது.

பேருந்து நிலையம் உள்ளே தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், அனைத்து பேருந்துகளும் சென்று வர நடவடிக்கை எடுத்து, பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

x