திமுக-வுக்கு சாதகமாக திட்டமிட்டு வெளியிடப்படும் கருத்துக் கணிப்பு: செல்லூர் ராஜு குற்றச்சாட்டு


மதுரை: திமுகவுக்கு சாதகமாக திட்டமிட்டு கருத்துக்கணிப்பு வெளியிடப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முனிச்சாலை பகுதியில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கூட்டணியை பொதுச்செயலாளர் பழனிசாமி பார்த்துக்கொள்வார். தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று அமித்ஷா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாக திட்டமிட்டு வெளியிடப்படுகிறது. மக்கள்தான் எஜமானவர்கள். தேர்தலில் இந்த கருத்துக் கணிப்புகள் எல்லாம் தூள்தூளாகிவிடும். சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தவறான பதில்களை முதல்வரும், அமைச்சர்களும் தெரிவிக்கின்றனர். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்றினார்களா ? அவர்கள் இன்று சட்டப்பேரவையில் ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, புதுடெல்லியில் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘செங்கோட்டையன் ஏன் தனியாக அமித்ஷாவை சந்தித்தார் என்பது குறித்து அவரிடம் கேளுங்கள். என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது ? அவர் மூத்த தலைவர், அவருக்கும் பொதுச் செயலாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்’ என்று செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

x