‘இபிஎஸ் முதல்வராக இருந்தால் ஒரே நாளில் 100 நாள் திட்ட நிதியை பெற்றுவிடுவார்’ - ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை


மதுரை: நூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதியை பெற முடியாதது தமிழக அரசின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது என தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கரிசல்பட்டி அலப்பச்சேரி வீரப்பட்டி, பூசலபுரம் ஆகிய கிராமங்களில் பூத் கமிட்டி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டது. நீட் தேர்வு ரத்து செய்வோம் என்ற ரகசியத்தை வெளியிடவில்லை. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய பல லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியதாக கூறினர். அந்த கையெழுத்து குறித்த ரகசியமும் வெளியிடவில்லை. தற்போது நீட் தேர்வு பற்றி கேள்வி கேட்டால், உதயநிதி ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டைவிட மிகவும் வேகமாக ஓடுகிறார். தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். மக்கள் மனதில் பழனிசாமிதான் முதலிடத்தில் உள்ளார். அவரின் புகழை திசை திருப்ப குழப்பத்தை ஏற்படுத்த ரூம் போட்டு யோசிக்கின்றனர்.

டெல்லியில் இருந்து நிதி வர தாமதமானால் தமிழக அரசு தாராளமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு தனது நிதி வழங்கலாமே. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சரியாக கணக்கு கொடுக்கவில்லை என்று மத்திய அரசு, திமுக அரசு மீது குறை கூறுகிறது. அதற்கு திமுக அரசு பதில் கூறவில்லை.

இன்றைக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி பெற முடியவில்லை. தமிழகத்துக்கு வேண்டிய நிதியை பெற்று தர முடியாதவர்கள் ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும். கே.பழனிசாமி முதல்வராக இருந்தால் ஒரே நாளில் நிதியை வாங்கி சாதிப்பார். மின் கட்டணம், பால், சொத்து வரி உயர்வு என மக்கள் எல்லாமே உயர்ந்துவிட்டதால் மக்கள் அவதிப் படுகின்றனர். இதற்கு திமுக அரசு தான் பதில் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

x