திண்டுக்கல்: உரிய அனுமதியிருந்தும் டிராக்டர்களில் மண் எடுத்துச் செல்ல விவசாயியிடம் பணம் கேட்ட போலீஸ் அதிகாரியை கண்டித்து விவசாயிகள் சாலையின் குறுக்கே டிராக்டர்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தண்ணீர்பந்தம்பட்டியை சேர்ந்த விவசாயி மணிகண்டன். இவர், மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று தனது விளைநிலத்துக்கு அருகிலுள்ள சித்தூர் குளத்திலிருந்து வண்டல் மண் எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
நேற்று குளத்திலிருந்து டிராக்டர்களில் தனது தோட்டத்துக்கு மண் எடுத்து வந்தபோது, எரியோடு காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு லோடுக்கு ரூ.500 வழங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அனுமதி சீட்டை விவசாயி காட்டியபோதும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயி மணிகண்டன், தான் மண் எடுத்து வந்த டிராக்டர்களை வேடசந்தூர் - எரியோடு சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக அப்பகுதி விவசாயிகளும் திரண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த எரியோடு போலீஸார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி இது போன்று நடக்காது என போலீஸார் தெரிவித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. விவசாயிகள் டிராக்டருடன் மறியலில் ஈடுபட்டதால் வேடசந்தூர் - எரியோடு சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.