வேப்பிலை கலந்த பச்சரிசி மாவு பரிமாறி கொண்டாட்டம்: சிங்கம்புணரி அருகே விநோத விழா


சிவகங்கை: சிங்கம்புணரி அருகே ஒற்றுமையுடன் நோய்நொடியின்றி வாழ வேப்பிலை கலந்த பச்சரிசி மாவை பரிமாறிக் கொள்ளும் விநோத விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி கிராம மக்கள் ஒற்றுமையுடன் நோய்நொடியின்றி வாழ ஆண்டுதோறும் அம்மன் மலையேற்றும் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் செல்வ விநாயகர் கோயில் அருகே வேப்பிலை மூலம் பச்சை குடில் அமைத்தனர்.

அந்த குடிலில் 7 அம்மன்களை வேண்டி, கரகத்தை ஏற்படுத்தினர். தொடர்ந்து அன்று இரவு 7 சாமியாடிகள் சாமியாட்டம் ஆடினர். பின்னர் அக்னி சட்டி எடுத்தும் அம்மன் கரகத்தை சுமந்தும் ஆண்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது வழிநெடுகிலும் பெண்கள் வேப்பிலை கலந்த பச்சரிசி மாவை முறங்களில் வைத்திருந்தனர். கரகம் கடந்து சென்றதும், பச்சரிசி மாவை அனைவரும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு, அதை சாப்பிட்டனர்.

ஆண்கள் கரகத்தை ஓடை ஊருணியில் கரைத்தனர். அதேபோல் பச்சை குடிலையும் அகற்றி, அருகேயுள்ள கோயில் கண்மாயில் கரைத்தனர். தொடர்ந்து செல்வ விநாயகர் கோயிலில் பங்குனி திருவிழாவுக்கு காப்புக் கட்டினர்.

இதுகுறித்து சாமியாடி மருதுபாண்டி கூறியதாவது: எங்கள் கிராமத்தை நோய் அண்டக் கூடாது என்பதற்காக இந்த விழாவை கொண்டாடுகிறோம். கரகத்தை 7 அம்மன்களாக நினைத்து உருவாக்குவோம். ஆனால் 7 அம்மன்களுக்கும் பெயர் கிடையாது. கரகத்தை ஊருணியில் கரைப்பதை அம்மன் மலையேற்றுதல் என்போம். தொடர்ந்து செல்வ விநாயகர் கோயில் பங்குனி திருவிழாவுக்கு காப்புக் கட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

x