மூவரைவென்றான் குடைவரை கோயிலில் ரூ.84 லட்சத்தில் கிரிவல பாதை: பணிகள் தொடக்கம்


ஸ்ரீவில்லிபுத்தூர்: மூவரைவென்றான் குடைவரை கோயிலில் ரூ.84 லட்சம் மதிப்பில் கிரிவலப் பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரைவென்றான் கிராமத்தில் லிங்ககிரி மலையில் பிரதான சிறப்பு மிக்க மரகத வள்ளி தாயார் சமேத மலைக் கொழுந்தீஸ்வர் கோயில் அமைந்துள்ளது. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த குடைவரை முறையில் அமைக்கப்பட்ட கருவறையில் மூலவர் மலைக் கொழுந்தீஸ்வர் தாய்ப்பாறையிலேயே செதுக்கப்பட்டு லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். மரகதவள்ளி தயார் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து குடைவரை கோயில் அமைந்துள்ள லிங்ககிரி மலையை சுற்றி 2.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிரிவல பாதை அமைக்க ரூ.84 லட்சமும், சுகாதார வளாகம் கட்டுவதற்கு ரூ.9 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது. மலையடிவாரத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கிரிவலப் பாதை அமைக்க மண் பாதையை சமப்படுத்தும் பணி தொடங்கி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x