விருதுநகரில் தயாராகும் நேர்த்திக்கடன் பொம்மைகள், அக்னி சட்டிகள்!


விருதுநகர்: மாரியம்மன் கோயில்களில் நடைபெறும் பங்குனிப் பொங்கல் திருவிழாக்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் பொம்மைகள், அக்னிச் சட்டிகள், ஆயிரம் கண் பானைகள் தயாரிக்கும் பணி விருதுநகரில் விறுவிறுப்படைந்துள்ளது.

கோடை வெயில் சுட்டெரிக்கும் பங்குனி மாதத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அம்மன் கோயில்களில் பொங்கல் வழிபாடும், திருவிழாக்களும் நடத்தப்படுவது வழக்கம். கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்காக மஞ்சள் நீராடுதல், மஞ்சள் கிழங்கு வைத்து காப்புக் கட்டுதல், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் வீட்டில் வேப்பிலை வைத்தல் போன்ற சம்பிரதாயங்களுடன் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும். திருவிழாவின்போது பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து அக்னிச் சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

விருதுநகர் மாவட்டத்தில் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இம்மாதம் 6-ம் தேதி பங்குனிப் பொங்கல் விழாவும், 7-ம் தேதி கயிறு குத்து மற்றும் அக்னிச் சட்டியும், 8ம் தேதி திருத் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பக்தர்கள் நேர்த்திக் கடனாகச் செலுத்தும் மண் பொம்மைகள் தயாரிக்கும் பணி விருதுநகரில் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொம்மைகள் தயாரிக்கும் மையிட்டான்பட்டியைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூறியதாவது: விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், திருத்தங்கல், இருக்கன்குடி, சங்கரன்கோவில், பண்ணாரி மாரியம்மன் கோயில் போன்ற வெளிமாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் மண் பொம்மைகளையும் தயாரித்து வருகிறோம்.

இதற்காக தை, மாசி, பங்குனி மாதங்களில் விரதம் இருந்து இத்தொழிலை மேற்கொள்கிறோம். களிமண், செம்மண், கரிசல்மண், வண்டல்மண் மற்றும் மணல் கலந்து இப்பொம்மைகள் தயாரிக்கிறோம். பின்னர், பொம்மைகளுக்கு ஏற்ற வகையில் வர்ணங்கள் தீட்டி மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்கிறோம்.

பக்தர்கள் வேண்டிக்கொண்டு அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்தும் ஆண் உருவம், பெண் உருவம், தொட்டில் குழந்தை, தாய்-சேய் பொம்மைகள், திருமணத்துக்கு வேண்டிக்கொண்டு காணிக்கை செலுத்துவோருக்கான ஜோடி செட் பொம்மை, குடும்ப பொம்மை செட், கால்பாதம், கை, ஆயிரம் கண்பானை, அக்னிச்சட்டி, வீடு பொம்மை, தவழும் குழந்தை பொம்மை, கார் பொம்மை மற்றும் வெளிநாடு செல்ல விமான பொம்மை, ஆடு, பசு, காளை உள்ளிட்ட பொம்மைகளை தயாரிக்கிறோம். இவை ரூ.100 முதல் ரூ.500 வரைக்கும் விற்பனை செய்கிறோம் எனத் தெரிவித்தனர்.

x