‘தனியார் குளிர்பான விற்பனையை அதிகரிக்க தர்பூசணி பற்றி அதிகாரிகள் வதந்தி’ - விவசாயிகள் பகீர் புகார் 


சென்னை: அந்நிய நாட்டு குளிர்பானங்களின் விற்பனையை அதிகரிக்கவே தர்பூசணி பழம் குறித்து உணவுப் பாதுகாப்புத்துறையினர் தவறான வதந்தி பரப்பி வருவதாக செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நல சங்க தலைவர் வெங்கடேசன், “ சமீபத்தில் ஊசி போட்ட தர்பூசணி பழத்தை விற்பனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் தவறான தகவல் பரவி வருகிறது. விவசாயிகள் எந்த ரசாயன உரத்தையும் தர்பூசணி விளைச்சலில் பயன்படுத்துவதில்லை, இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வதந்தி காரணமாக மக்கள் தர்பூசணியை வாங்க தயங்குகின்றனர். அதுபோல தர்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்காத காரணத்தால், பழங்கள் செடியிலேயே அழுகி போகின்றன.

நாங்கள் தர்பூசணியை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷிடம் தருகிறோம். அவர் அதில் ஊசி போட்டு எப்படி ரசாயனம் பரவுகிறது என்று காண்பிக்க வேண்டும். இல்லையேல் அவர் தர்பூசணி பற்றி கூறிய விஷயத்தை தவறு என்று வாபஸ்பெற வேண்டும்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தர்பூசணி குறித்து தவறான தகவலை கூறியுள்ளனர். அவர்கள் மீது செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டும். உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் தவறான தகவலை பரப்பியதால் தமிழகம் முழுவதும் 50,000 ஏக்கர் தர்பூசணி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தர்பூசணி விவசாயிகள் யாரும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு விவசாயம் செய்வதில்லை. விவசாயி வயிற்றிலே அடிக்காதீர்கள். லட்சக்கணக்கில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தர்பூசணி சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. முன்பு ஒரு டன் ரூ.16,000க்கு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது ரூ.3000 அல்லது ரூ.4000 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. தனியார் குளிர்பான நிறுவனங்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூறி குளிர்பானங்களை விற்கின்றனர். ஆனால் மக்கள் தர்பூசணி, கிர்ணி, இளநீரை விரும்பி அருந்துகின்றனர். எனவே அந்நிய குளிபானங்களை விற்பனை செய்யவே தர்பூசணி பற்றி இதுபோல பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்” என்று அவர் கூறினார்.

x