அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி: கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்களா?


விருதுநகர்: மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை மூலம் நரிக்குடி, திருச்சுழி, ரெட்டியபட்டி, பந்தல்குடி, வதுவார்பட்டி, சுக்கிலநத்தம், பரளச்சி, வெள்ளையாபுரம் மற்றும் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அதி நவீன சிகிச்சை அளிக்கும் வகையில் 2 அறுவை சிகிச்சை அரங்குகள், டயாலிசிஸ் பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி உள்ளிட்டவையுடன் கூடிய வகையில் 6 தளங்களில் ரூ.34 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

தரம் உயர்த்தப்பட்டுள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளது. எனவே, மருத்துவர்கள் எண்ணிக்கையை போதிய அளவில் உயர்த்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, காவிரி வைகை - குண்டாறு - பாசன விவசாய சங்க கூட்டமைப்பு விருதுநகர் மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் கூறுகையில், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவுக்கு போதிய அளவு இட வசதி இல்லை. 3 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் சில நேரம் ஒருவர்கூட இல்லாத நிலை உள்ளது. போதுமான செவிலியர், உதவியாளர் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பலர் கண் அறுவை சிகிச்சைக்கு மதுரைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். எனவே, மாவட்ட சுகாதார நிர்வாகம் காலதாமதமின்றி முதுநிலை மருத்துவர் தலைமையில் கண் சிகிச்சை பிரிவுக்கும் மற்ற சிகிச்சைப் பிரிவுகளும் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

x