‘ஆதவ் அர்ஜுனா என் தந்தை பணத்தை தவறாக பயன்படுத்துகிறார்’ - மார்ட்டின் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு


சென்னை: ஆதவ் அர்ஜுனா என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார், எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார் என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து ஜோஸ் மார்ட்டின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அர்ஜுன் ஆதவா கூறிய கருத்துக்கு எனது கண்டனத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். "அவர் தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார், எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார்" என்ற அண்ணாமலையின் கருத்தையும் நான் ஆதரிக்கிறேன். பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்துகொண்டு பல்வேறு கட்சிகளில் சேருவதன் மூலமாக தனது அரசியல் மற்றும் பண பேராசையை பூர்த்தி செய்ய முயல்கிறார்.

ஆதவ் அர்ஜுனாவின் முட்டாள்தனமான செயல்களுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அங்குள்ள காமராஜர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது.

x