சென்னை: டிஎன்பிஎஸ்சி வருடந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு நாளை (ஏப்.1) வெளியிடப் படுகிறது.
வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குருப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.
முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கிய இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். வயது வரம்பு வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி-யின் 2025ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டணையில், குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்பட்டு முதல் நிலைத் தேர்வு ஜுன் 15-ம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளளது. அதன்படி, குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு நாளை (ஏப்.1) வெளியிடப்படுகிறது.
இதற்கிடையே, குருப்-1 கேடரில் இதுவரை தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு குருப்-1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும் என கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழிலாளர் நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, குருப்-1 தேர்வுடன் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பதவியும் சேர்க்கப்படுகிறது.