குப்பையாகிப் போன ஐந்தினை பூங்கா சிலைகள்: தூத்துக்குடி மாநகராட்சி கவனிக்குமா ?


படம்:என்.ராஜேஷ்

தூத்துக்குடி: பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57.10 கோடி மதிப்பீட்டில் மானுடவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்கா ஆகியவை ஒரே பகுதியில் அமைக்கப்பட்டன. இவை கடந்த 2022-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன.

ஆனால், மக்கள் பயன்பாடு குறைவாக இருப்பதாக கூறி இந்த பூங்கா பகுதிகள் ஒவ்வொன்றாக வேறு வகைக்கு மாற்றப்பட்டன. பூங்காவின் ஒரு பகுதி மாநகராட்சி படிப்பகமாக மாற்றப்பட்டுள்ளது. நூலகத்துடன் கூடிய இந்த படிப்பகத்தை போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, போக்குவரத்து பூங்கா மகளிருக்கான பிங் பூங்காவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக ஐந்தினை பூங்காவை சிறிய கால்பந்து பயிற்சி மையமாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஐந்தினை பூங்கா ஏற்கெனவே முறையான பயன்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாததால், அதில் இருந்த பொருட்கள் சேதமடைய தொடங்கின. இந்த பூங்காவில் தமிழகத்தின் 5 வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலப்பகுதி மக்களின் வாழ்வியலை குறிக்கும் வகையில் தத்ரூபமான சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. முறையான பராமரிப்பு இல்லாததால் சிலைகள் சேதமடைய தொடங்கின.

இதையடுத்து அந்த சிலைகளை மாநகராட்சி பணியாளர்கள் அங்கிருந்து அகற்றி, எதிரே உள்ள எம்ஜிஆர் பூங்காவில் ஒரு ஓரத்தில் குப்பைகளைப் போல போட்டு வைத்துள்ளனர். இது இந்த பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு வரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை வேதனை அடையச் செய்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல லட்சம் செலவு செய்து உருவாக்கிய இந்த சிலைகள் வீணாக கிடக்கின்றன. எனவே, இந்த சிலைகளை சீரமைத்து, வர்ணம் பூசி மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். ஐந்தினை மக்களின் வாழ்வியலை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் இந்த சிலைகளை காட்சிப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x