மதுரை: பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் தலைமைக் காவலர் இறந்த நிலையில், அவரது மனைவிக்கு கருணைத் தொகை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் போலீஸ் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 2002-ல் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி துரைசாமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிலுவையில் இருந்தபோது, துரைசாமி இறந்தார்.
இந்நிலையில், துரைசாமியின் மனைவி அமுதா கருணைத் தொகை கோரி மனு அளித்தார். கணவர் பணிநீக்கம் செய்யப்பட்டதால், கருணைத் தொகை வழங்க முடியாது என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அமுதா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக் கோரி, மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணைத் தொகை வழங்க முடியாது என விதியில் கூறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் சில அரிய காரணங்களுக்காக தகுதியானவர்களுக்கு கருணைத் தொகை வழங்க நியமன அதிகாரிக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகை கிடையாது என்பது தவறான செயலாகும்.
விதிப்படி கருணைத் தொகை வழங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானதாக இருக்க வேண்டும். இங்கு பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமைக் காவலர் மீது தனி நபர்களுடன் சண்டையிட்டார், விதிமுறைகளை பின்பற்றாமல் மருத்துவ விடுப்பில் சென்றார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானது அல்ல. மேலும், தலைமைக் காவலரின் மனைவி தினக்கூலி பணியாளராக உள்ளார். மகன் போலியோ தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். மகள் படிக்கிறார். பெற்றோர் வீட்டிலிருந்து எந்த ஆதரவும் இல்லை. எனவே, மேல்முறையீடு தள்ளுபடி செய்யப் படுகிறது. கருணைத் தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.