கும்பகோணம் அரசு மருத்துவமனை அவலம்: சேதமடைந்துள்ள படுக்கைகள் - நோயாளிகள் அவதி


தஞ்சை: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான இரும்புக் கட்டில்கள் மற்றும் மெத்தைகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளதால், நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்காக தினமும் 1,000-க்கும் அதிகமானோர் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால், 2014-ல் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் 50-க்கும் அதிகமான இரும்புக் கட்டில்கள், மெத்தைகள் வழங்கப்பட்டன. ஆனால், அவை முறையாக பராமரிக்கப் படாததால், இரும்புக் கட்டிலின் கால்கள் விரிந்து, எந்நேரத்திலும் உடைந்துவிழும் அபாயத்தில் உள்ளன.

இதேபோல, கட்டில்களில் விரிக்கப்பட்டுள்ள மெத்தைகள் உறைகள் மற்றும் ரெக்சின் கிழிந்து, நோயாளிகளின் முதுகை பதம்பார்க்கும் வகையில் உள்ளன. இருப்பினும், படுக்கை தட்டுப்பாடு காரணமாக வேறு வழியின்றி நோயாளிகள் சேதமடைந்த கட்டில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சேதமடைந்துள்ள கட்டில்கள், மெத்தை களை விரைந்து சீரமைக்கவோ அல்லது புதிதாக அமைக்கவோ, மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலரான அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீவத்சன் கூறியது: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பயன்படுத்துவதற்காக 2014-ல் அப்போதைய எம்.பி. ஆர்.கே.பாரதிமோகன், தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 கட்டில்களை, மெத்தையுடன் வழங்கினார். அவை முறையாக பராமரிக்கப்படாததாலும், 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதாலும் மெத்தை உறைகள், உள்ளே இருக்கும் ரெக்சின் ஆகியவை கிழிந்துவிட்டன.

பெரும்பாலான கட்டில்களும் சேதமடைந்து, உடையும் நிலையில் உள்ளன. இதனால், நோயாளிகளால் அந்த கட்டில்களில் படுக்க முடியவில்லை. எனவே, மருத்துவமனையில் சேதமடைந்துள்ள கட்டில்கள், மெத்தைகளை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

x