ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 2 உரிமம் தேவை: நிபந்தனையைக் கைவிட கோரிக்கை


தஞ்சை: ஏஐடியுசி சார்ந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் சார்பில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 2 உரிமங்கள் வைத்திருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஏற்கெனவே தனித்தனியாக உரிமம் அனுமதிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இதில், ஓட்டுநர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி இல்லை என கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்கு வரத்துக் கழகத்தில் வேலை கிடைக்கும் என நம்பி, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக் கின்றனர்.

இந்நிலையில், அண்மையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஆன்லைன் மூலம் ஏப்.21 வரை விண்ணப்பிக்க லாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு 2 உரிமங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் புதிய நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. அரசின் இந்த அறிவிப்பு, போக்குவரத்துக் கழக வேலைக்காக, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதாக உள்ளது.

மேலும், அரசின் சார்பில் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்டு வருபவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் மட்டுமே வழங்கப்படுகிறது. முன்பிருந்தது போல நடத்துநர் உரிமம் சேர்த்து வழங்குவது இல்லை. இதனால், அரசின் இந்த அறிவிப்பால், கட்டணம் செலுத்தி சாலைப் போக்குவரத்து நிறுவனத்தால் பயிற்சி முடித்து வருவோரும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவர்.

எனவே, தமிழக இந்த பாதிப்புகளை எல்லாம் பரிசீலனை செய்து, ஏற்கெனவே பின்பற்றிய நடைமுறையின்படி ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்ட த்துக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச் செல்வன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் துரை.மதிவாணன், என்.சேகர், சி.ராஜமன்னன், எம்.தமிழ் மன்னன், சிஐடியு எஸ்.ராம சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x