சென்னை: ஜோசப் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். கூட்டத்தை வைத்து வாக்காளர்களை கணிக்க முடியாது என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜோசப் விஜய் அவர்களே..நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். உங்களை கூடப்பிறந்த தம்பி மாதிரிதான் ஒரு ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போது உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளார்கள். ஆனால் என் வீட்டில் என் மகன் உங்கள் ரசிகர் என்றீர்கள். அப்போது மிகவும் அமைதியாக இருந்தவர், இப்போது மேடையில் பயங்கரமாக டயலாக் பேசுகிறார். அவரின் வசனங்களை அந்தளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
களத்திற்கு வாருங்கள், அப்போதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். எனக்கும் அதிகம் ரசிகர்கள் இருந்தனர். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு. அருமைத்தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். கூட்டத்தை வைத்து வாக்காளர்களை கணிக்க முடியாது. எனக்கும் பெரியளவில் கூட்டம் உள்ளது. நானும் எம்.பி தேர்தலில் நின்றேன்.
நான் கட்சி ஆரம்பிக்க மாட்டேன். வேறு ஏதாவது கட்சியின் சார்பில் நான் நிற்பேன் அல்லது சுயேச்சையாக போட்டியிடுவேன். நான் முதல்வர் ஸ்டாலினை மானசீகமாக நேசிக்கிறேன். அவரை விஜய் எதிர்ப்பது தவறு. விஜய் களத்தில் இறங்கி பார்க்கட்டும்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவராக இருந்தபோது அவரை எதிர்த்து நான் நின்றேன். இப்போது அவரது மகன் ஜோசப் விஜய்யை எதிர்த்து நிற்க தயாராக இருக்கிறேன். இதற்காக விஜய் ரசிகர்கள் என்மீது தாக்குதல் நடத்துவார்கள். தமிழக முதல்வர் எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்றார்