கிருஷ்ணகிரி: ஓசூர் வனக்கோட்டத்தில் உணவு, தண்ணீருக்காகச் சாலையில் சுற்றிவரும் குள்ளநரிகளைப் பாதுகாக்க வேண்டும். வனப்பகுதியில் பழ வகை மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ஓசூர் வனக்கோட்டம் 1,492 சகிமீ பரப்பளவைக் கொண்டது. இந்த வனப்பகுதியில் மூங்கில், தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் உள்ளிட்ட மரவகைகளும், யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்புத் திண்ணிகள், குள்ள நரிகள், காட்டுப் பூனைகள் மற்றும் மயில்கள் மற்றும் அரியவகை வன விலங்குகளும், சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. மேலும், கடந்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 2 புலி நடமாட்டம் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் உயிர்வாழும் வன உயிரினங்களின் பாதுகாக்க கடந்த 2014-ம் ஆண்டு காவிரி வடக்கு வன உயிரின சரணாலயமும், 2022ம் ஆண்டு காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமும் அமைக்கப்பட்டது. ஓசூர் வனக்கோட்டத்தில் கடந்த காலத்தில் அதிக எண்ணிக்கையில் குள்ளநரிகள் சுற்றி வந்த நிலையில், அவற்றின் எண்ணிக்கை குறைந்து அழிவின் விளிம்பில் உள்ளன. தற்போது வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் உணவு, தண்ணீருக்காகக் குள்ளநரிகள் வனப்பகுதியையொட்டி உள்ள சாலைகளில் சுற்றித் திரிகிறது. இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: பருவ காலத்துக்கு ஏற்ப எந்த உணவு கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு குள்ளநரிகள் வாழும். இவற்றின் உணவில் பெரும்பகுதி எலி, முயல், பாம்பு, பல்லி, சிறு பறவைகள் மற்றும் களாக்காய், நாவல் பழம், இலந்தை போன்ற பழங்களையும் சாப்பிடும். இந்நிலையில், வனப்பகுதியில் அதற்காக உணவுத் தேவை கிடைக்காத நிலையில், கிராமங்களில் புகுந்து கோழி மற்றும் ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால், குள்ளநரிகள் கொல்லப்பட்டு, அவை அழிந்து வரும் வன உயிரினங்கள் பட்டியலில் உள்ளது.
குள்ளநரிகள் சிறிய விலங்குகளையும், பறவைகளையும் உணவாக்குவதால், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்துவதுடன், பழங்களை உட்கொண்டு விதை பரவலுக்கும் உதவுகிறது. வயல்களின் அருகில் சுற்றித் திரியும் குள்ளநரிகள் அங்குள்ள எலிகளின் எண்ணிக்கையை கட்டுப் படுத்தியது.
ஓசூர் வனக்கோட்டத்தில் கடந்த ஓராண்டாய் அஞ்செட்டி மற்றும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் குள்ளநரிகள் நடமாட்டம் உள்ளது. தற்போது, வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், இவை சாலையோரங்களில் சுற்றித் திரிகிறது. இவற்றைப் பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வனத்தில் பட்டி அமைக்க தடை: வனத்துறையினர் கூறியதாவது: ஓசூர் வனக்கோட்டத்தில் ஏராளமான குள்ள நரிகள் இருந்த நிலையில், கால நிலை மாற்றத்தாலும், போதிய உணவு இல்லாததாலும், வனப் பகுதியில் ஆட்டுப்பட்டி அமைத்தவர்களாலும் குள்ள நரி இனம் அழிந்து விட்டது. குறிப்பாக வனப் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருபவர்கள் குள்ள நரிகளைக் கொன்றுவிட்டனர்.
கடந்த ஓராண்டாக அஞ்செட்டி மற்றும் போடூர் பகுதியில் சில குள்ள நரிகள் சுற்றி வருகின்றன. இவற்றைப் பாதுகாக்க வனப் பகுதியில் கால் நடைகளுக்குப் பட்டி அமைப்பதை தடுத்து வருகிறோம். தற்போது இருக்கும் குள்ள நரிகளைக் கண்காணித்துப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மேலும், வனப் பகுதியில் பழ வகை மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.