4-வது முறையாக தேசிய அளவில் முதல் பரிசு: புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டு!


புதுச்சேரி: மத்திய அரசின் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், அண்மையில் தேசிய அளவிலான குழந்தைகள் கல்விசார் போட்டி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த 150 ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 650 ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இதில் ஆசிரியர்களுக்கான ஆடியோ பிரிவு போட்டியில், புதுச்சேரி முத்திரையர்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில், முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டிக்கான விருதுகள் வழங்கும் விழா ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு மண்டல கல்வி நிறுவனத்தில் நடந்தது. இவ்விழாவில் மத்திய அரசின் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை இயக்குநர் அமரேந்திர பெஹெரா, மேகாலயாவின் வடகிழக்கு மாநில கல்வி நிறுவனத்தின் முதல்வர் ப்ளோரெட் ஜித்கார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

இதில் ஆசிரியர் செந்திலுக்கு முதல் பரிசுக்கான விருது மற்றும் ரொக்க பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது. விருது வென்ற அவரை புதுச்சேரி பள்ளி கல்வித் துறையின் துணை இயக்குநர் (பெண் கல்வி) சிவராம ரெட்டி, முத்திரையர் பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அனிதா உள்ளிட்டோர் பாராட்டினர். தேசிய அளவிலான குழந்தைகள் கல்வி சார் போட்டியில் தொடர்ந்து 4-வது முறையாக ஆசிரியர் செந்தில் குமார் பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x