சென்னை: விழுப்புரம் மேல் திரௌபதி அம்மன் கோயிலின் பூஜை நடைமுறைகள் அன்றாடம் நடைபெறும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு வார காலத்தில் அந்த கோயில் திறக்கப்பட உள்ளது என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “திமுக அரசு எல்லோருக்கும் எல்லாம் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையே சாதி, சமய, மதங்களுக்கு அப்பாற்பட்ட சுதந்திரமான சுவாசக் காற்றை - அந்தந்த மதத்தினர் விரும்புகிற வழிபாட்டை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிற ஆட்சி. திமுக ஆட்சியில்தான் அன்றைய முதல்வர் கருணாநிதி, திருவாரூர் கோயில் தேரை ஓட வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், 20 ஆண்டுகள் ஓடாமல் இருந்த கண்டமாதேவி கோயில் தேரோட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் மேல் திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனர். அந்த கோயிலின் பூஜை நடைமுறைகள் அன்றாடம் நடைபெறும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு வார காலத்தில் அந்த கோயில் திறக்கப்பட உள்ளது. அதற்காக இந்த ஆட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து காலம் கனிந்து வரும் நிலையில் ஒரு போராட்டத்தை அறிவித்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் அரசியல்வாதிகள். இது போன்ற போலி அறிவிப்புகளை கண்டு மக்கள் மயங்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால், விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.