மதுரையில் 507 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்


மதுரை மாவட்டத்தில் 2020 முதல் 2024 நவம்பர் வரையிலும் கடந்த 5 ஆண்டில், 507 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் திருமணத்துக்கு எதிராக 183 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரம் தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், மதுரை டிவிஎஸ் நகரைச் சேர்ந்த என்.ஜி.மோகன் என்பவர், மதுரை மாவட்ட சமூகநலத் துறை அதிகாரியிடம் தகவல் கேட்டிருந்தார். இதுகுறித்து என்.ஜி.மோகன் கூறியதாவது: கடந்த 2020-ல் குழந்தைகள் திருமணம் குறித்து அதிகாரிகளுக்கு 79 புகார்கள் வந்துள்ளன. இதன்மூலம் 60 குழந்தைகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று 2021-ல் வரப்பெற்ற 183 புகார்களில் 145 திருமணம் தடுக்கப்பட்டு, 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2022-ல் கிடைத்த 123 புகார்களின் பேரில் 86 திருமணங்கள் தடுக்கப்பட்டு, 37 வழக்குகள் பதியப்பட்டன. 2023-ல் 134 புகார்களில் 81 திருமணங்கள் தடுக்கப்பட்டு, 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து, 2024 நவம்பர் வரையிலும் 171 புகார்கள் மூலம் 135 திருமணங்கள் தடுக்கப்பட்டு, 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 507 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட பெற்றோர், உறவினர்கள் மீது மொத்தம் 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், கடந்த 2020 ஏப்ரல் முதல் இன்று வரை குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தும் பணிக்காக உரிய அலுவலகத்துக்கு, மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கிய நிதி விவரம் குறித்தும் கேள்வி கேட்டிருந்தேன். ஆனால், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த நிதியும் இதுவரை பெறப்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

போதிய நிதி ஒதுக்காததால், குழந்தைத் திருமணங்களை தடுப்பதில் சமூக நலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சிரமப்பட வேண்டியிருக்கிறது. எனவே, இரண்டு அரசுகளும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து, குழந்தைத் திருமணங்களை தடுக்கவும் மற்றும் அதிகரிக்கும் போக்சோ வழக்குகளை குறைக்கவும் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x