ராணிப்பேட்டை: வாலாஜா பேருந்து நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் தரையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிகை எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியில் பேருந்து நிலையத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த ஒரு மாதம் மட்டும் பயணிகள் அமருவதற்காகத் தற்காலிகமாக இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த இருக்கைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இதனால், பேருந்துக்காகக் காத்திருக்கும் முதியவர்கள், உடல் நிலை பாதிக்கப் பட்டவர்கள், கர்ப்பிணிகள் என பலதரப்பட்ட மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இருக்கை வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு இடையே தரையில் அமர்ந்து காத்திருக்கின்றனர்.
மேலும், கடந்த சில நாட்களாகக் கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்பக் காற்றும் வீசி வருகிறது. வெப்பக் காற்றினால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து மின் விசிறிகளும் பகல் நேரங்களில் சுழலாமல் நிறுத்தி வைக்கப் படுகின்றன. மாலை 6 மணி முதல் இரவு நேரங்களில் தாராளமாக மின் விசிறிகள் அனைத்தும் சுழல்கின்றன எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அது ஒரு புறம் இருக்கப் பேருந்து நிலையத்துக்குள் இரு சக்கர வாகனங்கள் தாராளமாக நிறுத்தி வைக்கப்படுவதால் பேருந்து வந்தவுடன் அதில் ஏற முடியாமல் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்வதாகப் பயணிகள் கூறுகின்றனர். எனவே, பொது மக்களின் கோரிக்கையை ஏற்றுப் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர இருக்கை வசதியையும், பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவும், மின்விசிறிகள் சுழலவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.