சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தீயணைப்புத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 674 தீயணைப்பு வீரர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேலாகியும் பயிற்சி வழங்கப்படாததை சுட்டிக்காட்டி கடந்த 29-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
எனது அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் தகுதியுள்ள 640 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தீயணைப்புத் துறை அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது பாமகவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். தீயணைப்புத் துறையின் இந்த நடவடிக்கை மிகவும் தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கதாகும்.
640 பேருக்கும் ஒரே இடத்தில் பயிற்சி அளிக்கப்படாமல் பல்வேறு இடங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள மையத்தில் பயிற்சி கிடைப்பதை தீயணைப்புத்துறை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.