திருவண்ணாமலை: உறுதியான கொள்கை நிலைப்பாட்டால், தமிழக அரசியலில் மைய புள்ளியாக விசிக உள்ளது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மாநாடு திருவண்ணாமலை அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இரா.நற்சோதனை தலைமை வகித்தார். அக்கட்சி யின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “திமுகவுக்கு எதிரான விமர்சனங்கள், வீழ்த்தும் முயற்சி பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து, இன்றும் தொடர் கிறது. அரசியலில் விடலை பருவத்தில் இருப்பவர்கள் திமுகவை சவாலுக்கு இழுக்கிறார்கள். விமர்சனங்களை முறியடித்து, திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. அக்கட்சியுடன் விசிக, கொள்கை புரிதலுடன் கைகோர்த்துக் களமாடுகிறது. இது தான் பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. விசிக-வின் உறுதியான கொள்கை நிலைப்பாட்டால், தமிழகத்தின் அரசியல் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்ததும், தவெக தலைவர் விஜய் நடத்திய முதல் பொதுக்குழுவில் விசிகவை விமர்சிக்கிறார்கள் என்றால், இதற்கு நமது உறுதியான கொள்கை நிலைப்பாடுதான் காரணம். தமிழக அரசியலில் மையப் புள்ளியாக விசிக உள்ளது.
25 ஆண்டுக் கால அரசியல் வரலாற்றில் விடுதலை சிறுத்தை கட்சி ஒவ்வொரு நிலைப்பாடும் கடுமையான சூழ்நிலைகளில் எடுத்த நிலைப் பாடுகள் ஆகும். மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளோம். 2026-ல் நடைபெற உள்ள தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டி என விஜய் கூறுகிறார். இதன் மூலம் பழனிசாமி மற்றும் அண்ணாமலையை விட நாங்கள் தான் பெரிய சக்தி என்கிறார். 2026-ல் 2-வது இடத்தை பிடிப்பது யார் ? என்பதில்தான் போட்டி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விசிகவும் முக்கிய பங்காற்றியது. திமுக-வை வீழ்த்த பலருக்கு ஆசை இருக்கலாம். இதுவெறும் திமுகவை வீழ்த்துவதாகப் பொருள் அல்ல. திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியை வீழ்த்துவோம் எனச் சொல்கிறார்கள். விசிக இருக்கும் வரை எந்த கொம்பனாலும், இந்த கூட்டணியை வீழ்த்த முடியாது உறுதிப் படக் கூறுகிறேன். வேங்கை வயலுக்கு பழனிசாமி ஏன் ? செல்லவில்லை. யார் ? உங்களைத் தடுத்தார்கள். பாஜக ஏன் ? பேசவில்லை.
திமுகவுக்கு முட்டுக்கொடுக்கவும், தாங்கி பிடிக்கவும் விசிகவுக்கு வேலை இல்லை. அந்த அளவுக்கு திமுக பலவீனமாக இல்லை. பல ஜாம்பவான் களை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் ஏறிய வரலாற்றைக் கொண்டது திமுக. ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு 1991-ல் நடைபெற்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற திமுக, 1996-ல் பீனிக்ஸ் பறவை போன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்றால், அதிமுக-வைப் பலவீனப் படுத்த வேண்டும் என்பதுதான், அவர்களது யுக்தி. தமிழகத்தில் பாஜக காலூன்ற 100 மோடிகள் பிறந்து வர வேண்டும். விசிக இருக்கும் வரை, அது நடக்காது. இடங்கொடுக்க மாட்டோம். விரட்டி அடிக்கும் வரை சிறுத்தைகள் ஓய மாட்டோம். சனாதன சக்திகளின் சூழ்ச்சியை வீழ்த்த, திமுகவை விட ஒரு படி மேலே இருப்போம்.
விசிக இருக்கும் அணி, ஆட்சி அமைப்பதற்கு வலுவான சக்தியாக இருப்போம். மூத்த மொழியான தமிழ் மொழி அழிவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இந்தி திணிப்பை எதிர்ப்போம்” என்றார். இதில், பொதுச் செயலாளர்கள் ம.சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார் மற்றும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.