திருச்சி பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்; பணம் சேமித்து புத்தகங்கள் வாங்க ஊக்குவிப்பு!


திருச்சி: சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், செய்தித்தாள் வாசிப்பு இயக்கம் சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நேற்று நடைபெற்றது.

நகர் நலச்சங்கத் தலைவர் கி.ஜெயபாலன், ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி விக்டர் பொன்னுதுரை ஆகியோர் தலைமை வகித்து, 40 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உண்டியல்களை வழங்கி பேசியபோது, “மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறு தொகையை உண்டியலில் சேமித்து, புத்தகங்கள் வாங்க வேண்டும். மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே பிற புத்தகங்களையும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். படிக்கும் பழக்கம் நிச்சயமாக இளைஞர்களி ன் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும்” என்றனர்.

நகர் நலச்சங்க செயலாளர் து.செந்தில்குமார், “தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில், மாணவர்கள் உண்டியலில் சேமித்த பணத்தைக் கொண்டு புத்தகங்கள் வாங்க முன்வர வேண்டும்” என்றார். சமூக ஆர்வலர் தமிழ்செல்வி இளங்கோ, ‘சுத்தம் - சுகாதாரம்' உறுதிமொழி வாசித்து மாணவர்களை ஏற்க செய்தார். யோகா துணை பேராசிரியர் சுமதி தர்மன், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிமுக யோகா பயிற்சி அளித்தார். சங்கத்தின் மூத்த உறுப்பினர் எஸ்.ஆர்.சத்திய வாகீஸ்வரன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

x