திருச்சி: சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம்- மன்னார்புரம் வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) சார்பில், சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருச்சி மாவட்ட எல்லையில் இருந்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வரை 38.55 கி.மீ. தொலைவுக்கு சாலையை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையி்ல், தற்போது பழைய பால்பண்ணை தொடங்கி- டிவிஎஸ் டோல் கேட் வரையிலான சாலையை புதுப்பிக்கும் பணிகள் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சாலைப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம், பழைய தார் சாலையை பெயர்த்தெடுத்து, அதன் கழிவுகளை முறையாக, முழுமையாக அப்புறப்படுத்தாததால், சாலைகளில் ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் சிதறிக்கிடக்கின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் கிருஷ்ணானந்தம் கூறியது: சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சாலை புதுப்பிக்கும் பணிக்காக சாலைகள் ஆங்காங்கே பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெயர்த்தெடுக்கப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றுவதில்லை. மேலும், பெயர்த்தெடுக்கப்பட்ட பகுதியில் சாலை முழுவதும் சிறுசிறு குழிகளாக காணப்படுகின்றன. இதனால், இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்லும்போது தடுமாறி கீழே விழும் நிலைம் ஏற்படுகிறது. தவிர, சாலை முழுவதும் ஜல்லிக் கற்கள் பரவிக்கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் அபாயம் உள்ளது.
மேலும், செந்தண்ணீர்புரத்தில் இருந்து மேம்பாலம் இறங்கி பொன்மலைக்கு திரும்பும் வழியில் சாலையையொட்டி மண் சாலையில் ஜல்லிக் கற்களை கொட்டிவைத்துள்ளனர். இதனால், நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், அந்த இடத்தையும் சாலை என எண்ணி, அதில் பயணித்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சாலைப் பணிகள் நடைபெறுவதாக எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் எதுவும் இல்லை. எனவே, சாலைப் பணிகளை முறையாக செய்து, விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து ‘நகாய்’ அதிகாரி ஒருவர் கூறியது: சாலையில் பெயர்த்தெடுக்கப்படும் ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கழிவுகள், உடனடியாக ‘கம்ப்ரஸர்’ இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. ஆயினும் சாலையில் தொடர்ந்து வாகனங்கள் செல்வதால் சிறு, சிறு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவிக்கிடக்கின்றன. அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க ஒப்பந்த நிறுவனத்தை அறிவுறுத்தி உள்ளோம்.
சாலைப் பணிகள் நடைபெறுதாக அறிவிப்புகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணிகள் இன்னும் 15 நாட்களில் நிறைவடை யும். அதன் பிறகு சாலைகளில் மார்க்கிங் செய்வது, ஒளிரும் ‘ஸ்டெட்’ அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த சாலைப் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.