அரசு பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


அரசுப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தமிழை முதன்மை பாடமாகத் தேர்வு செய்து பட்டப் படிப்பு (பிஏ), பட்ட மேற்படிப்பு (எம்ஏ), இளம் முனைவர் (எம்.ஃபில்.), முனைவர் (பிஹெச்.டி.) படிப்புகளையும், அவற்றுடன் கல்வியியல் (பி.எ.ட்) பட்டமும் பெற்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றியும், தகுதிக்கு குறைவான பணிகளை பார்த்துக் கொண்டும் அவதியுற்று வருகின்றனர். பலர் பட்டம் பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்களின் அவல நிலைக்கு தமிழக அரசு கடைப்பிடித்து வரும் கொள்கைகள்தான் காரணமாகும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படுகிறது. ஆனால், 8-ம் வகுப்பு வரை தமிழ் பாடத்தை கற்பிக்க தமிழாசிரியர் பணியிடங்கள் தனியாக ஏற்படுத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும், அவற்றில் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் தனியார் பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

தமிழகத்தில் தமிழாசிரியர்களுக்கு வேலை கிடைக்காததற்கு இதுதான் முக்கியக் காரணமாம். தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வரலாறு பயின்ற ஆசிரியர்களால் ஆங்கிலப் பாடத்தை நடத்த முடியும். கணிதம் படித்த ஆசிரியர்களால் அறிவியல் பாடத்தையும், அறிவியல் படித்த ஆசிரியர்களால் கணிதத்தையும் கற்பிக்க முடியும். ஆனால், தமிழ் பாடத்தை தமிழ் படித்தவர்களால்தான் தெளிவாக நடத்த முடியும். இதை தமிழறிஞர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், தமிழகத்தை ஆளும் அரசுகள் செவிமடுக்க மறுக்கின்றன. இது தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

தமிழ் பாடத்தை கற்பிக்க தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படாததால் தமிழ் படித்த ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில், அவர்கள் படித்த படிப்புக்கு சற்றும் பொறுத்தம் இல்லாத பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். எனவே, அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தனியாக தமிழாசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் அரசு மூலம், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழ் படித்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி வாடும் தமிழாசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

x