நத்தமாடிப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: வீரர்களை உற்சாகப்படுத்திய நடிகர்கள் விக்ரம், துஷாரா


சீறிப்பாய்ந்த காளையை அடக்கிய மாடுபிடி வீரர். படம்: நா.தங்கரத்தினம்

நத்தம் அருகே நத்தமாடிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து பரிசுகளை வென்றனர். நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் பங்கேற்று மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நத்தமாடிப்பட்டியில் உள்ள கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. ஆன்லைன் மூலம் 742 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு களம் இறக்கப்பட்டனர்.

திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.

முதலில் வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் உள்ளூர் காளைகள், வெளியூர் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர். வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சைக்கிள், குத்துவிளக்கு, அண்டா, கட்டில், குக்கர், சேர் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை வீரர்கள் பெற்றுச் சென்றனர்.

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 25 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர்.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை, நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் பார்வையிட்டனர். நடிகர் விக்ரம் கூறுகையில், ‘முதன்முதலாக ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் பார்க்கிறேன். நமது பாரம்பரிய போட்டியை பார்ப்பதில் மகிழ்ச்சி. நான் படத்தில்தான் வீர தீர சூரன், ஆனால் இங்கு களத்தில் உள்ள அனைவருமே வீர தீர சூரர்கள்தான்’ என்றார்

x