மதுரை: தன்னம்பிக்கை மிக்க ஆளுமையாக வளர இக்கல்லூரி தந்த வாய்ப்புகளே காரணம் என மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி நிகழ்வில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி பெருமிதம் தெரிவித்தார்.
மதுரை நகரிலுள்ள முக்கிய மகளிர் கல்லூரியான மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியின் வைர விழாவை கல்லூரி நிர்வாகம் கொண்டாடுகிறது. இதன் முக்கிய நிகழ்வாக இக்கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் சூ.வானதி தலைமையில் நடந்தது. இக்கல்லூரியில் பயின்று தற்போது, பல்வேறு துறைகளில் சாதிக்கும் முன்னாள் மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். கல்லூரி வளாகத்தில் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
இவ்விழாவில் முன்னாள் மாணவி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் காணொளியில் பங்கேற்று பேசியது: “கடந்த 1980 முதல் 1983 வரை மீனாட்சி அரசு கல்லூரி மாணவியாக ஆங்கிலத் துறையில் பயின்றேன். இக்காலத்தின் நினைவுகளை எனது வாழ்க்கையின் பொக்கிஷமாகக் இன்றைக்கும் கருதுகிறேன். மேலும், தன்னம்பிக்கை மிக்க ஆளுமையாக வளர்ந்து நிற்க இக்கல்லூரியில் படித்தபோது, நாடகங்களில் நடிக்கவும், கவிதை எழுதுவதற்கும், மேடைகளில் பேசுவதற்கும் இந்த தாய் கல்லூரி தந்த வாய்ப்புகளும், ஆசிரியர்கள் கொடுத்த உற்சாகமுமே பெரும் காரணியாக இருந்தது” என்றார்.
இவ்விழாவில் விருதுநகர் தாசில்தார் உமா மகேஸ்வரி, கிருஷ்ணகிரி அரசு கல்லூரி முதல்வர் அனுராதா அவர்கள், டிவிஎஸ் பள்ளிகளின் குழும ஒருங்கிணைப்பாளராக சத்யா கிருஷ்ணகாந்த், அமெரிக்காவிலுள்ள ஒஹயோ பல்கலைக்கழக ஆய்வு உதவித் தொகையை விருதாகப் பெற்ற சியாமளா உள்ளிட்ட பல முன்னாள் மாணவியர்களும் பங்கேற்று தங்களது நினைவுகள், அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் யாழ். சந்திரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை வரலாற்றுத்துறை பேராசிரியை செல்வி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.